உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் உக்கிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா இன்று (26) அதிகாலை நடத்திய வான்வழித் தாக்குதல்கள் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, வடகிழக்கு எல்லையோர நகரமான கார்கிவ் மற்றும் தெற்கே அமைந்துள்ள டான்யூப் நதிக்கரை துறைமுகங்கள் ரஷ்யாவின் இலக்குகளாக மாறியுள்ளன.
கார்கிவ் பிராந்திய அரச வழக்கறிஞர்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, கார்கிவ் நகரின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதேவேளை, எல்லைப் பகுதிக்கு அருகில் தனது காரில் பயணித்துக்கொண்டிருந்த ஆடவர் ஒருவர் ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில் சிக்கி ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். இந்தத் தாக்குதல்களில் மேலும் 9 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டான்யூப் நதிக்கரையில் மின்சார நெருக்கடி
உக்ரைனின் தென்மேற்குப் பகுதியில் உள்ள இஸ்மாயில் (Izmail) துறைமுகத்தைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய "பாரிய" ட்ரோன் தாக்குதல்கள் அங்குள்ள துறைமுகச் செயல்பாடுகளை முடக்கியுள்ளன. இத்தாக்குதலினால் துறைமுகத்தின் கூரைகள் மற்றும் களஞ்சியசாலைகள் தீப்பற்றி எரிந்ததுடன், அப்பகுதிக்கு மின்சாரம் வழங்கும் மின்நிலையங்களும் (Energy Infrastructure) பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. இதன் விளைவாக, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இருளில் மூழ்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேட்டோ உறுப்பு நாடான ருமேனியாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்த டான்யூப் துறைமுகங்கள் மீதான தாக்குதலானது, உக்ரைனின் தானிய ஏற்றுமதி மற்றும் மனிதாபிமான விநியோகப் பாதைகளைத் துண்டிக்கும் ரஷ்யாவின் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. இச்சம்பவத்தின் போது ருமேனிய எல்லைப் பகுதிகளிலும் ட்ரோன் சிதைவுகள் விழுந்துள்ளதா என்பது குறித்து அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு சோதனைகளை ஆரம்பித்துள்ளது.
ரஷ்யாவின் எல்லையிலும் உயிரிழப்புகள்
மறுபுறம், உக்ரைன் நடத்திய பதில் தாக்குதல்களில் ரஷ்யாவின் பெல்கொரோட் (Belgorod) எல்லைப் பகுதியில் இருவர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யத் தரப்பு தெரிவித்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த 18 வயது இளைஞன் மற்றும் காரில் பயணித்த பெண் ஒருவருமே உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களில் பலியாகியுள்ளனர். எல்லையின் இருபுறமும் பொதுமக்கள் மீதான வான்வழித் தாக்குதல்கள் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







