இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 7 இலட்சத்தைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.
ஜனவரி 1 முதல் மார்ச் 25 வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 708,348 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ள நிலையில், இதில் அதிகபட்சமாக இந்தியாவிலிருந்து 139,164 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்திலிருந்து 74,295 பேரும், ரஷ்யாவிலிருந்து 63,505 பேரும் வருகை தந்து இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு வலுசேர்த்துள்ளனர்.
குறிப்பாக, மார்ச் மாதத்தின் முதல் 25 நாட்களில் மாத்திரம் 151,693 சுற்றுலாப் பயணிகள் இலங்கையை வந்தடைந்துள்ளனர். இவர்களில் இந்தியாவிலிருந்து 39,424 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 13,967 பேரும், ரஷ்யாவிலிருந்து 13,272 பேரும் உள்ளடங்குகின்றனர். அத்துடன் சீனா (12,166) மற்றும் ஜேர்மனி (10,523) ஆகிய நாடுகளிலிருந்தும் கணிசமான பயணிகள் வருகை தந்துள்ளனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மொத்தம் 229,298 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்த நிலையில், தற்போதைய உலகளாவிய போர்ச் சூழல் மற்றும் விமானப் போக்குவரத்துச் சவால்களுக்கு மத்தியிலும் இலங்கையின் சுற்றுலாத் துறை இவ்வாண்டு எழுச்சியுடன் காணப்படுவது பொருளாதார ரீதியில் ஒரு சாதகமான அறிகுறியாகப் பார்க்கப்படுகின்றது.









